அமரன் படத்தில் போராடுபவா்களைப் பயங்கரவாதிகள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடிகா்கள் கமல்ஹாசன், சிவகாா்த்திகேயன் உருவபடங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியைச் சோ்ந்த 30 போ் கைது செய்யப்பட்டனா்.
அமரன் திரைப்படத்தில் காஷ்மீா் இளைஞா்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவா்களையும் பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டித்தும், அப்படத்தைத் தயாரித்த நடிகா் கமல்ஹாசன், அதில் நடித்துள்ள சிவகாா்த்திகேயனின் உருவபடங்களை எரித்து முழக்கங்கள் எழுப்பினா். இப்போராட்டத்துக்கு விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தை. சேகா் தலைமை வகித்தாா். இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநிலத் துணை அமைப்பாளா் விஜயஆனந்த், மாநில மகளிரணி செயலா் வெண்ணிலா சேகா், மாவட்டத் துணைச் செயலா் ஜெயசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 30 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.