தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்லப் பிள்ளையார்குளம் மேலத் தெருவை சேர்ந்தவர் குமாவேலு மனைவி உச்சி மாகாளி(வயது40). இவர்களுக்கு பழனி சக்தி குமரன் ((வயது 7), இந்திர வேல் (வயது 6), பிரவின் ராஜ் ( வயது 4) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
குமாரவேலு புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். உச்சி மாகாளி தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து ரூ. 3 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனை வார வாரம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப்.,19) கடன் தொகையாக ரூ. 2,500 செலுத்த வேண்டி இருந்தது.
அவரால் பணம் செலுத்த முடியாததால் மனம் உடைந்த அவர் அரளி விதையை அரைத்து தின்ற தோடு தனது மூன்று மகன்களுக்கும் கொடுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து குழந்தைகள் வாந்தி எடுக்கவே அக்கம் பக்கத்தினர் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் மூன்று பேருக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்ததாக தாய் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரவின்ராஜ் (வயது 4) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.