நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த முகமது (23) என்ற இளைஞர் மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே, அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்த நிலையில், முகமது உடனான தொடர்பை அந்த பெண் துண்டித்துள்ளார்.
இதனால், ஆவேசம் அடைந்த முகமது, அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் குறித்த தகவல்களை சமூக வலைதள நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் பழகிய காலத்தில் அனுப்பப்பட்ட புகைப்படங்களை தொழில்நுட்ப முறையில், ஆபாச முறையில் மார்ஃபிங் செய்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள், இது தொடர்பாக தென்காசி போலீசாரிடம் புகார் அளித்தனர். எனவே, தென்காசி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுவை தேடி வந்தனர். இந்நிலையில், முகமது அவரது வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், தென்காசி சைபர் குற்றப்பிரிவு போலீசார் நாகப்பட்டினம் விரைந்து சென்று முகமதுவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.