சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டியில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து காளியம்மன் கோயில் 26 ஆம் ஆண்டு ஆடி சிறப்பு அன்னதான பூஜை விழா , பால்குட, பூத்தட்டு விழா இன்று நடைபெற்றது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளி அன்று மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஆண்டி முனீஸ்வரர் கோயில் வீட்டில் நடைபெற்ற சாமியாட்டத்தை தொடர்ந்து, கரந்த மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் குடம் மற்றும் பால்குடம், பூத்தட்டு, தீச்சட்டிகள் சுமந்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். வரும் வழியில் ஆங்காங்கே சாமியாடிகள் அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறி வந்தனர். இந்த அருள்வாக்கை கேட்பதற்காக புதுப்பட்டி, புதூர், நெடுமரம், உடையநாதபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிந்தனர். வழி நெடுகிலும் பெண்கள் வேப்பிலை மஞ்சள் கலந்த நீரை ஊற்றி வழிபாடு செய்தனர். பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பாலாலும், பூக்களாலும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கரந்த மலையிலிருந்து கொண்டு வந்த புனித நீர் குடத்தை சாமியாடி தலையில் சுமந்து வந்து கோயில் திருக்குளத்தில் மூழ்கியதும் கூடியிருந்த பெண்கள் குலவை இட்டு வழிபாடு செய்தனர்.