சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மீன் சந்தையில் மீன் வாங்கி வியாபாரம் செய்வதற்காக காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் கிருஷ்ணன் (48) அதிகாலை 3. 45 மணியளவில் வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் மீன் சந்தையில் மீன் எடுத்து காரைக்குடி, கோவிலூர், புதுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்வதும், காரைக்குடியில் கடை போட்டு விற்பனை செய்தும் வருகின்றார். வழக்கம்போல இன்று திருப்பத்தூரில் மீன் வாங்குவதற்காக வந்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்திருந்த கிருஷ்ணன் செருப்பு அணியவில்லை. மீன்களை வாடகை வாகனத்தில் ஏற்ற முயலும்பொழுது சகதியில் வலுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால், கடை வாசலில் ஊண்டியிருந்த கம்பியை பிடித்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு இருந்த வியாபாரிகள் உடனடியாக அவரை 108 ஆம்புலன்சில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இந்நிலையில் மீன் வியாபாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் கதறி அழுத சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.