சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கௌரிப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 18 மாடுகளும், 162 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வட்டமாக அமைக்கப்பட்டுள்ள திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளையினை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடத்திற்குள் அடக்க வேண்டும் என நிர்ணைக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 10 காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டு பிடி மாடுகளாக அறிவிக்கப்பட்டது. ஒரு காளை மண்டியிட்டு மைதானத்தின் நடுவே அமர்ந்ததால் அது தகுதி இழப்பாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 7 காளைகள் வீரர்களை மிரட்டி குறிப்பிட்ட நேரத்தில் அடங்க மறுத்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசும், பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டியினை கௌரிப்பட்டி, நாட்டரசன்கோட்டை , காளையார்மங்கலம், சிவகங்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.