சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறுதியாண்டு பயின்றுவரும் பயிற்சி பெண் மருத்துவர் தனது பணியினை முடித்து மருத்துவக்கல்லூரி பின்புறமுள்ள விடுதிக்கு நடந்து செல்லும்போது பின்னால் தொடர்ந்து வந்த மர்ம நபர் முகத்தில் துணியை போர்த்தி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு சக பெண் பயிற்சி மருத்துவர்கள் குவிந்ததை அடுத்து மர்ம நபர் தப்பி ஓடிய நிலையில் இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் சம்பந்தமாக புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் பணி முடித்து இரவில் தங்க அறை வசதி இல்லை, விடுதிக்கு செல்லும் வழியில் போதுமான மின் விளக்கு வசதி இல்லை என்றும் பாதுகாப்பிற்கு போதுமான சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை என்றும் அதனை மருத்துவக்கல்லூரி நிர்வாகம் செய்து தரக்கோரி பயிற்சி மருத்துவர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை நிறைவேற்ற கோரி இன்றும் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ இயக்குநரகத்தில் இருந்து துணை இயக்குநர்கள் ஜெயராஜ் மற்றும் சாந்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்