சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் & சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக 8வது நாளான இன்று நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் கூட்டத்தில் களைகட்டியது. "காசியை விட அதிகம் புண்ணியம் தரும் புஷ்பவனேஷ்வரர் ஸ்தலம்" எனப் போற்றப்படும் இந்த ஆலயத்தில், கடந்த ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், சுவாமியும் அம்மனும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சேலை அணிந்த சுவாமி, அம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.
இந்த நிகழ்வில், அம்மன் சார்பில் ரமேஷ் பட்டர் மற்றும் சுவாமி சார்பில் மகேஷ் பட்டர் மாலை மாற்றி வைக்கும் பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கரகோஷம் மத்தியில் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு திருமணமான பெண்கள் தங்களின் திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொண்டு பக்தி பரவசத்தில் கலந்துகொண்டனர். விழா முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.