மானாமதுரை அருகே தனியார் நிலத்தில் ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயை பதிக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அப்பணியை தடுத்து நிறுத்தினர்.
ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் 2009-ல் ரூ. 616 கோடியில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுமையாகவும், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளும் பயனடைந்து வருகின்றன. குழாய்கள்பதித்து 15 ஆண்டுகள் கடந்ததால் அடிக்கடி சேதமடைந்து வந்தன. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 574 கோடியில் திருச்சி முத்தரநல்லூர் காவிரி ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை 286 கி. மீ. தூரத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்கள் புதிதாக பதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாவட்டம் சிவகங்கை மானாமதுரை அருகே மேலபசலை ஊராட்சி தீயனூர் கிராமத்தில் குழாய்கள்பதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் குழாய்களை தனியார் நிலத்தில் பதித்ததால் அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக காவல் நிலையம், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.