சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேவுள்ள கோச்சடை கிராமம் அருகே மேலநெட்டூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் என்பதால் இதன் மூலம் சுமார் 400 ஏக்கர் அளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெருகிறது. தற்சமயம் வெயில் காலம் என்பதால் இங்கு தண்ணீர் வற்றி வறட்சியாக காணப்படுவதுடன் உள்ளே கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்த கண்மாய்க்குள் இருந்த சருகுகள் தீப்பற்றி மெல்ல, மெல்ல பரவி காற்றின் வேகம் காரணமாக அங்கிருந்த கருவேல மரங்களுக்கும் தீ பரவி எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கிராம இளைஞர்கள் உடனடியாக தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததுடன் களத்தில் இறங்கி பணங்கீற்றுகளை கொண்டு தீயை அனைக்கும் முயற்சியில் இறங்கினர். இதற்கிடையே கடும் தீயின் காரணமாக புகை சூழ்ந்து கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கண்மாய் வழியாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் ஒன்று ஒன்று உரசி தீப்பற்றி இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இளையான்குடி பெரிய கண்மாயில் இதே போன்ற தீ விபத்து நடைபெற்ற நிலையில் இன்று அருகில் உள்ள மேல நெட்டூர் கண்மாயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.