ஏற்காட்டில் 47-வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியது

2239பார்த்தது
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் சீசன் களைகட்டி இருக்கும். ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு 47-வது கோடை விழா-மலர்கண்காட்சி நேற்று காலை ஏற்காடு அண்ணா பூங்காவில் கோலாகலமாக தொடங்கியது. வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு முதன்மைச் செயலாளருமான அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் இயக்குனர் குமரவேல் பாண்டியன், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோர் ரிப்பன் வெட்டி கோடை விழா, மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

அவர்கள் அண்ணா பூங்காவில் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட காற்றாலை, கடல்வாழ் உயிரினங்களான நண்டு, பவளப்பாறைகள், சிப்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகளை பார்வையிட்டு ரசித்தனர். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் மலைபயிர் காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சியையும், மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சியையும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, கலெக்டர் பிருந்தா தேவி ஆகியோர் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி