சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், ஏ. வி. ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசை அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது கட்சிக்காரரான முன்னாள் எம்எல்ஏவும், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெங்கடாசலம் 1985ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு மக்களின் ஆதரவில், பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலும் ஊடக நேர்காணலில் எனது கட்சிக்காரர் செய்யாத பொறுப்பற்ற, கேவலமான, அவதூறான குற்றச்சாட்டை நீங்கள்செய்துள்ளீர்கள். எனது கட்சிக்காரர் மீது நீங்கள் கூவத்தூரில் தங்கியிருந்த நேரத்தில் நடிகை எங்களிடம் தங்கி இருந்தது போன்று பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளீர்கள். இந்த
குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றதாகும். இந்த குற்றச்சாட்டினால் எனது கட்சிக்காரர் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். இதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளீர்கள். நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் பொய்யாகும். எனவே இந்த நோட்டீஸ் கண்ட 24 மணி நேரத்திற்குள் நீங்கள் ஊடகத்திற்கு முன்பு குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.