சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தற்போது ரெயில்வே நிர்வாகம் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, ஊட்டி உள்ளிட்ட 78 ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெற கியூ ஆர் குறியீடு அமைத்து உள்ளது.
பல்வேறு டிஜிட்டல் கட்டண தளங்கள் மூலமாக ரெயில் பயணிகள் தடையற்ற பண பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ளலாம். இந்த புதிய முயற்சியானது கியூஆர் குறியீட்டில் ஸ்கேன் செய்து பணமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குவதன் மூலம், பயணிகள் சிரமமின்றி முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட்களை எடுக்க முடியும். இந்த வசதியின் மூலம் அனைத்து டிக்கெட் கவுண்டர்களிலும் பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாக பெற முடியும். இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது. எனவே பயணிகள் அனைவரும் கியூ ஆர் குறியீட்டை பயன்படுத்தி, நீண்ட நேரம் வரிசையில் நிர்ப்பதை தவிர்த்து ரெயில் டிக்கெட்டை எளிதாக பெறலாம் சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.