
மேட்டூர் அனல்மின் நிலையம்.. 210 மெகாவாட்டாக குறைந்த மின்உற்பத்தி
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதில் பழைய அனல்மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் 3-வது யூனிட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்து காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக 1-வது மற்றும் 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது 4 யூனிட்டுகள் கொண்ட இந்த அனல்மின் நிலையத்தில் தற்போது 2-வது யூனிட்டில் மட்டுமே மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதேபோன்று 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்திலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1, 440 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தற்போது 210 மெகாவாட்டாக குறைந்துள்ளது.