இராமநாதபுரம் மாவட்டம்
திருப்புல்லாணி ஒன்றியம்
பத்ரா தரவை ஊராட்சியில் கடந்த 2004ல் மகளிர் கட்டப்பட்ட சுகாதார வளாகம் உள்ளது. சிதிலமடைந்த அந்த சுகாதார வளாகத்தை யாரும் பயன்படுத்த வில்லை. அதை தொடர்ந்து அந்த சுகாதார வளாகத்தை இடித்து அதன் கற்களை கிராமத்தில் சாலை பணிகளுக்கு பயன்படுத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர். அது தொடர்பாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினர்
இந்நிலையில் கடந்த 17ம் தேதி திருப்புல்லாணி திமுக ஒன்றிய செயலாளர் ஏற்பாட்டின்படி சுகாதார வளாகத்தை சிலர் இடித்து கற்களை டிராக்டர் மூலம் அப்புறப்படுத்த முயன்றனர். அதை கிராமமக்கள் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம தலைவர் காசி விஸ்வநாதன் கூறுகையில், அரசு அனுமதி பெறாமல் ஒன்றிய செயலாளர் ஏற்பாட்டின் படி கட்டிடம் உடைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் கற்களை நாங்கள் எங்களது கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைக்கு செல்லும் சாலைக்கு பயன்படுத்துவதாக உள்ளோம். ரேஷன் கடைக்கு முறையான சாலை வசதி இல்லை. மழை நேரத்தில் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். அதனால் மாவட்ட நிர்வாகம் இதை முறையாக ஆய்வு செய்து சேதம் அடைந்துள்ள சுகாதார வளாகத்தை முழுமையாக இடித்து அந்த கற்களை ரேஷன் கடைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.