ஆப்பனுார் ஊராட்சியில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. 2023 ஜன. , ல் துவக்கப்பட்ட கட்டடப் பணிகள் தற்போது வரை முழுமை பெறாமல் பல மாதங்களாக பாதியில் நிற்கும் நிலையில் அதிகாரிகள் ஆய்வுக்கு வராததால் தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்தாமல் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கட்டடத்தில் கூரை மற்றும் முதல் தள மாடி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயரழுத்த மின் கம்பியை கடந்து பணிகள் செய்வது இயலாத காரியம். இதனால் விபத்து ஏற்படும். கடலாடி யூனியன் நிதியில் கட்டப்படும் ஊராட்சி அலுவலகம் தரமற்ற நிலையில் உள்ளது. முறையாக வேக வைக்கப்படாத செங்கற்களை கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகிவிடும். தற்போது கட்டடத்தின் செங்கல் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.
கட்டடத்தின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டிய யூனியன் அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளது. ஊராட்சி அலுவலகத்தின் கட்டடத்தின் மேலே செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். எனவே ஊராட்சி அலுவலக புதிய கட்டத்தில் தரமான பணி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.