பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுப் போட்டி மற்றும் கண்காட்சியினை சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று(செப்.25) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கிராம ஊராட்சிகள் அளவில் மகளிர் உதவிக்குழுவினருக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டார அளவில் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழுவினருக்கு இன்று மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது. இன்றைய நிகழ்வில் நான்கு வட்டாரங்களைச் சேர்ந்த 10 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 180 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய பொருட்களால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் முதல் பரிசு பெற்ற வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த இசைக்குழு சுய உதவிக்குழுவிற்கு ரூ. 5, 000ம், இரண்டாம் பரிசுபெற்ற சுய உதவிக்குழுவிற்கு ஆலத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த விடிவெள்ளி ரு. 4, 000ம், மூன்றாம் பரிசு பெற்ற பெரம்பலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த முத்தையாள் சுய உதவிக்குழுவிற்கு ரு. 3, 000ம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன.