நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளாவையொட்டி உள்ள பகுதி என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைக்கு பின்னே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலத்தில் தற்போது உருமாறியுள்ள ஜேஎன் 1 வகை கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் தினந்தோறும் 40 முதல் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் 5 சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.