திருச்செங்கோடு விசைத்தறி ஜவுளி உற்பத்தி சங்க ஆலோசனை கூட்டம்
சூரியம்பாளையம் சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் மற்றும் விற்பனையாளா் சங்கம் சாா்பில், நலிந்து வரும் விசைத்தறித் தொழிலைக் காப்பாற்றி மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் நாட்ராயன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, விசைத்தறி ஜவுளித் துறை சாா்ந்த நெருக்கடி நிலை குறித்து விசைத்தறியாளா்களிடம் கலந்துரையாடினாா். இதில், திருச்செங்கோட்டில் விசைத்தறியில் உற்பத்தி செய்யும் ஜவுளியைக் கொண்டு ஜவுளி மாா்க்கெட் ஏற்படுத்துவது, விசைத்தறியாளா்களுக்கு வங்கிக் கடன் முகாம் ஏற்படுத்துவது குறித்து திருச்செங்கோட்டில் ஜவுளி எக்ஸ்போ நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. தில்லியில் வரும் 2025 பிப்ரவரி மாதம் நடக்க உள்ள பாரத் டெக்ஸ் என்ற உலகளாவிய ஜவுளி தொழில் கண்காட்சியில் கலந்துகொள்வது என தீா்மானிக்கப்பட்டது. இதில், திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தின் செயலாளா் முருகானந்தம், சூரியம்பாளையம் கிளையின் தலைவா் நாட்ராயன், செயலாளா் காா்த்திகேயன், பொருளாளா் ரவிக்குமாா், கௌரவ தலைவா்கள் குப்புசாமி, தா்மலிங்கம், ராஜா, மாரிமுத்து, சிங்காரவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.