

நாமக்கல்: விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தற்கொலை
நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளையை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மூத்த மகள் கிருத்திகா (வயது 13), கிருத்திகா நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த கந்தம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.வி தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26ஆம் தேதி ஊருக்கு சென்று விட்டு மீண்டும் மாணவியின் தந்தை கோவிந்தராஜ் நேற்று மாலை பள்ளி விடுதியில் விட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு விடுதி அறையில் சகமாணவிகள் இல்லாத நேரத்தில் மாணவி கிருத்திகா தூக்குமரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகமாணவிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதன்படி முதல்கட்ட விசாரணையில் மாணவி விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.