பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க சிபிஐ வலியுறுத்தல்
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வெ. சேவையா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முத்து உத்தராபதி, துணைச் செயலாளர் கோ. சக்திவேல் ஆகியோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப் பூண்டி எம்எல்ஏவுமான மாரிமுத்து சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், "கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்பட்ட ரூ. 1,000 ரொக்கம், ஏழை- எளிய மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் சேர்த்து வழங்க வேண்டும். கனமழையில் நெற்பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000, இதர பயிர்களுக்கு ஏற்றவாறும் இழப்பீடு வழங்க வேண்டும். சுய உதவி குழுவுக்கு வழங்கும் கடனை தனியார் நிறுவனங்கள் வசூலிப்பதைத் தடுக்க காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சி. சந்திரகுமார், சி. பக்கிரிசாமி, பா. பாலசுந்தரம், வீரமோகன், சோ. பாஸ்கர், தி. திருநாவுக்கரசு, ம. விஜயலட்சுமி, கண்ணகி, ரெ. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.