தஞ்சாவூர்: கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
தஞ்சாவூரில் நேற்று அரசு மருத்துவமனைக்குச் செல்ல சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதியதில், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி கனகாம்பரம் (70). இவர், நேற்று (ஜனவரி 8) அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்குவதற்காக தஞ்சாவூருக்கு வந்தார். மருத்துவமனைக்குச் செல்வதற்காக தஞ்சாவூர் காந்திஜி சாலையைக் கடக்க முயன்றபோது, பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே நிலையம் நோக்கிச் சென்ற கார், கனகாம்பரம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கனகாம்பரம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரான தஞ்சாவூர் ஆரோக்கியப்பிரபு (40) என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.