தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் 2024-ம் ஆண்டில் மட்டும் 60 இணையவழி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 வெளிமாநில குற்றவாளிகள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து இணையவழி குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு 838 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், இணையவழி மூலம் பணமோசடி தொடர்பான புகார்களில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.5 கோடியே 69 லட்சத்து 68 ஆயிரத்து 282 தொகையானது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.83 லட்சத்து 9 ஆயிரத்து 684 தொகையானது நீதிமன்றம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களை இணையவழி குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் 525 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 2024 ஆண்டில் மட்டும் 3433 காணாமல் போன செல்போன்களில் 2417 கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 860 செல்போன்கள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 363 இணையவழி குற்றங்களில் தொடர்புடைய சிம்கார்டுகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அவை முடக்கம் செய்யப்பட்டுள்ளன.