நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்கள், தனி நபர் கழிப்பறை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். உதவி செயற் பொறியாளர் நிலை பதவி உயர்வுகளைக் கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா. ராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தை மாநிலத் தலைவர் எஸ். இரமேஷ் துவக்கி வைத்தார். மாவட்ட முன்னாள் செயலர் கை. கோவிந்தராஜன், மாநிலத் துணைப் பொதுச் செயலர் ஆ. ரங்கசாமி, மாவட்டச் செயலர் ந. தேசிங்குராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக 70 பேரை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.