தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை மணி ஒலிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தில் கட்டணக்கழிப்பறை, இலவச கழிப்பறை இருந்தாலும் சுற்றுப்புறங்களில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கப்படுவதால் பேருந்து நிலையங்கள் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பேருந்துக்காக காத்திருப்போர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மழைக்காலங்களில் மழைநீருடன் சிறுநீரும் கலந்து பொதுவெளியில் தேங்கி நிற்பதால் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பொது இடங்களைச் சுற்றிலும் தகரங்களை வைத்து அடைத்தது. இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பிரச்சினை தொடர்ந்த நிலையில் திருச்சி வழித்தட பேருந்துகள் நிற்கும் இடத்தில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தகரத் தடுப்புகளை ஒட்டி கண்காணிப்பு கேமராவுடன் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இக்கருவி 50 அடி நீளம் 10 அடி அகலத்திற்கு துல்லியமாக ஆட்களை அடையாளம் காணும். மேலும் இரவு நேரத்தில் தகரத்தில் சைரன் போன்று விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் யாராவது சிறுநீர் கழிக்கும் நோக்கத்தில் அருகில் சென்றால் சைரன் போன்று விளக்கு ஒளியுடன் எச்சரிக்கை மணி ஒலிக்கும். இதனால் இதுபோன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.