திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகை கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ஆவதால், தற்போது திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அக்கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது திருப்பணிகள் முடிவடந்ததையடுத்து நேற்று(செப்.16) மகா கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 14ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தீபாரதனை நடைபெற்றது. 15ஆம் தேதி முதல் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை, கும்பலங்காரம், ரக்சாபந்தனம், பூர்ணஹூதி, தீபாரதனை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று(செப்.16) காலை கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து காலை 9 மணிக்கு கடங்கள் புறப்பட்டு 9.15 மணிக்கு சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
பின்னர், 9.30 மணிக்கு நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்ந்து 9.45 மணிக்கு பத்ரகாளியம்மன் கோயில் விமான கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.