மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லம்பட்டியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயக்குமார் கலந்து கொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் நிதியை வாரி வழங்கும் மத்திய அரசு தமிழ்நாட்டை மதிக்கவே இல்லை, இந்திய வரைபடத்தில் தான் தமிழ்நாடு இருக்கிறதா என தமிழ்நாட்டு மக்கள் ஐய்யம் கொள்கிற வகையில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனையாக இருக்கிறது.
ஏற்கனவே மாநில அரசின் நிர்வாகத்தில் நிலைகுலைந்து போய் இருக்கிற மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல மத்திய அரசும் ஒரு புறத்திலே துன்புறுத்தி வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்த மக்களை இணைப்பது பாரம்பரியம், பண்பாடு, நாகரீகம் என்று சொன்னாலும் கூட இரயில்வே பாதைகள் தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கின்ற இணைப்பு பாலமாக அமைகிறது என்று கூறுகின்றனர்.
மூன்றாவதாக ஆட்சி அமைத்த பின் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் எதையும், எதுவும் அறிவிக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது, மத்திய அரசு இன்று இரயில்வே திட்டங்களில் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது என்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது என்று கூறினார்.