மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக உசிலம்பட்டி நகர கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் ஏற்பாட்டில் இன்று (மார்ச் 30) 500க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், மத்தியில் ஆளும் பாஜக நாங்கள் ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என சொல்கிறார்களே தவிர எந்த நன்மையும் செய்யவில்லை. ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் 23 ரூபாய் வரை கூட்டியதை பெரிதாக பார்ப்பதை விட விவசாயிகள் நகை கடன் வைத்தால் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பும் நடைமுறையில் வட்டியை மட்டும் கட்டி புதுப்பித்து கொள்ளலாம் என இருந்ததை இப்போது ரிசர்வ் வங்கி மூலமாக வட்டியை மட்டும் கட்டினால் போதாது முதலையும் சேர்த்து கட்ட வேண்டும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த விவசாயிகளும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். இந்த கடுமையான சட்டத்தின் நோக்கம் மத்திய அரசின் நிதிநிலை சரி இல்லை என்பதை காட்டுவதாக புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.