மதுரை தமுக்கம் மைதானத்தில் வருடந்தோறும் நடைபெறும் புத்தக திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படும், இந்தாண்டு புத்தக திருவிழா கடந்த 6 ஆம் தேதி தொடங்கி வருகிறது.
புத்தக கண்காட்சியை பொது மக்கள் பார்வையிட மாலை 6 மணி முதல் 9 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட காலை 11 மணி முதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 6 ஆவது நாளாக இன்று நடைபெற்ற புத்தக திருவிழாவை காண ஒரே நேரத்தில் குவிந்த மாணவர்களால் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் முழுவதும் இருந்து 30 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஒரே நேரத்தில் கடுமையான வெயிலுக்கு இடையே நீண்ட நேரமாக வரிசையில் மாணவர்கள் காத்திருந்த சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் ஒரே நேரத்தில் மாணவர்கள் குவிந்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். மேலும் குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டினார்கள்.