குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வரும் சூழலில் அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் திற்பரப்பு அருவியிலும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் கடந்த ஏழு நாட்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்படவில்லை.
இதனால் இன்று முதல் தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் இன்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் மதியம் வரை திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இன்று (24-ம் தேதி) பிற்பகல் 3 மணி அளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை அடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இருந்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சில பகுதிகளில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.