செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய அங்கமாம்பட்டு கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், ரேஷன் கடை, பள்ளி மற்றும் நெரும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக பைராகிமடம் மற்றும் அங்கம்மாம்பட்டு இடையே அமைந்துள்ள சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், திமுகவை சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின்18 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் என்பவர், மேற்கண்ட சாலையில் ரேஷன் கடை அருகே உள்ள இடம் தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி சாலையின் நடுவே பென்சிங் அமைத்துள்ளார். இதனால், அங்கம்மாம்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் ரேஷன் கடை இடு காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக 3 கி. மீ. , தொலைவு சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனால், சாலையை ஆக்கிரமித்து பென்சிங் அமைத்துள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விட்டிலாபுரம்-நெரும்பூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார், சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தினர்.