செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராஜாத்தி (40) என்பவர் எடையூர் ஊராட்சி துணை தலைவராக உள்ளார்.
கடந்த மே மாதம் கொக்கிலமேடு கிராம நுழைவாயில் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்துள்ளது. இதற்கு கொக்கிலமேடு மீனவ பஞ்சாயத்து சபையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பை மீறி பணிகள் நடந்ததால் கடந்த ஜூன் மாதம் ஊராட்சி துணை தலைவர் ராஜாத்தி குடும்பத்தினர் உட்பட 6 குடும்பத்தினரை ஊரை விட்டு மீனவ பஞ்சாயத்து சபையினர் ஒதுக்கி வைத்து, மீன் பிடிக்க தடை விதித்தனர். மேலும் கோவில் திருவிழாவிலும் பங்கு கொள்ள தடை விதித்தனர்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் திருக்கழுக்குன்றம் தாசில்தார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சப் கலெக்டர் ஆகியோரிடம் இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஜூன் 16ம் தேதி தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் மீனவ பஞ்சாயத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த நிபந்தனைகளை வாபஸ் பெற்றனர்.
தற்போது அதே 6 குடும்பத்தினரை மீண்டும் ஊரை விட்டு ஒதுக்கி, மீன் பிடிக்க தடை விதித்து மீனவ பஞ்சாயத்தினர் நிபந்தனைகள் விதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மீனவ பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேற்று (செப். 20) புகார் மனு அளித்தனர்.