செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் தண்ணீர் பந்தல் கிராமத்திற்குச் செல்லும் சாலை ஓரத்தில், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நுகர்பொருள் வாணிபர் கழக சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் இருந்து வரும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு, இங்கிருந்து லாரிகள் வாயிலாக, 200க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
சேமிப்பு கிடங்கில் 17 தொழிலாளர்கள் தினக்கூலியாக, கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். 2 ஆண்டுகளாக துவரம் பருப்பு இறக்க, டன் 1க்கு 300 ரூபாய் அட்டிக் கூலி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக, 150 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அட்டிக் கூலியை உயர்த்தி வழங்க வேண்டி அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால், துவரம் பருப்பு மூட்டைகளை லாரியில் இருந்து இறக்காமல், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின், வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு மூட்டைகளை இறக்க முயற்சி செய்த போது, தினக்கூலி தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.