ஆசிய சூட்டிங்பால் போட்டி தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீராங்கனை ஹரிணிக்கு இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்று சென்னை விமான நிலையம் திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2-வது ஆசிய சூட்டிங்பால் சாம்பியன்ஷிப் போட்டி நேபாளத்தில் உள்ள இட்டாஹரி நகரில் கடந்த 31-ந்தேதி தொடங்கி 3-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் போட்டியை நடத்திய நேபாளம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்றன. ஓபன் பிரிவில் பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. தங்கம் வென்ற இந்திய அணியில் புதுக்கோட்டை சேர்ந்த ஹரிணி என்ற வீராங்கனை இடம்பெற்று இருந்தார். அவர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்தநிலையில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்துடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஹரிணிக்கு விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து பெற்றோர் மற்றும் உறவினர் உற்சாகமாக வரவேற்றனர்.