காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தவிர, மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு தங்கி, ஸ்ரீபெரும்புதூர், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைக் கழிவுகள் பெருமளவு குவிந்துள்ளன. இதன் காரணமாக, மழைக்காலங்களில் வெள்ளநீர் வடிய தடை ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புகளை வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வடிகாலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றி, கால்வாயை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.