செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ரயில்வே கேட் பாதையை கடந்து தினம்தினம் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். காவனூர், ஏரிவாக்கம், ஒரத்தூர், திருவஞ்சூர், மேல்பாக்கம், கொருகங்தாங்கள் என சுமார் 25-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள மக்கள் காலை நேரத்தில் காட்டாங்கொளத்தூர் ரயில்வே கேட்டை கடந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்கின்றனர்.
மாலை நேரத்தில் காட்டாங்கொளத்தூர் ரயில்வே கேட்டை கடந்து வீடு திரும்புகின்றனர். இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் சரியான நேரத்திற்கு வேலைக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் காட்டாங்கொளத்தூர் ரயில்வே கேட் பாதை குண்டும் குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ளதால் மரணப்பள்ளங்கள் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன, வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து பலர் காயமடைகின்றனர்.
பெண்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது கடுமையாக சிரமப்படுகின்றனர். ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் போது சிலர் தங்களின் இருசக்கர வாகனத்தை ஆபத்தை உணராமல் வாகனத்தை தள்ளிக்கொண்டே ஆபத்தான நிலையில் கடந்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டாங்கொளத்தூர் பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பாட்டாளி, திமுக, அதிமுக மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.