ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபாலில் ஓட்டுப்போட 85 வயதிற்கு மேற்பட்ட 209 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைக் குறிக்கும் வகையில், தொகுதியில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்குகளை, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வீட்டிலிருந்தே தபால் வாக்குச்சீட்டின் மூலம் செலுத்திடும் வகையில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைச் சேகரிக்க, நடமாடும் தபால் வாக்குச்சீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு தொகுதியில், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் 209 பேர் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 94, பெண் வாக்காளர்கள் 115 பேர் அடங்குவர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 74 பேர் உள்ளனர். இந்த வாக்காளர்களிடம் விருப்பப்படிவம் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பம் தெரிவித்த வாக்காளர்களிடம், இந்த நடமாடும் தபால் வாக்குச்சீட்டுக் குழுவினர் ஒரு சில தினங்களில், வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குச் சீட்டுகளை நேரில் அளித்து, அதில் வாக்களித்த பின்னர், அவர்கள் வாக்களித்த தபால் வாக்குச்சீட்டுகளைச் சேகரிக்கும் பணியினை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.