ஈரோடு மினிபஸ் ஓட்டுநருக்கு அடி உதை; வைரல் வீடியோ
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் மலைக்கருப்புசாமி கோவில் பகுதிக்கு தனியார் மினி பஸ் செல்கிறது. மைக்கேல் பாளையம் பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மினி பஸ் அந்தியூர் காலனி என்ற பகுதியில் ஊருக்குள் சென்று மலைக்கருப்புசாமி கோவில் பகுதிக்கு சென்றது. அப்போது ஊருக்குள் பஸ் செல்லும் போது அவ்வழியாக வீட்டுக்கு சென்ற கேபிள் டிவி வயரை பேருந்து மோதி அறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டின் உரிமையாளரின் சிறுவன் அவரது நண்பருடன் பேருந்தை வழிமறித்து, மினி பேருந்து ஓட்டுநர் சிவராஜ் என்பவரிடம் 'ஏன் கேபிள் வயரை அறுத்து விட்டாய், கீழே இறங்கு, நான் பேருந்துக்குள் வந்தால் 16 அடி அடித்து விடுவேன்' என சத்தம் போட்டார். மினி பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளே அமர்ந்து கொண்டு இருந்த நிலையில் திடீரென அந்த சிறுவனும் அவரது நண்பரும் பேருந்தின் உள்ளே ஏறி பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த நடத்துநருக்கும் அடி விழுந்தது. இந்த வீடியோ அந்தியூர் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த மினி பேருந்து ஓட்டுநர் புகார் அளித்தபோது போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பினர்.