அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீட்டான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வெள்ளித்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து சண்முகநதி, இடும்பன்குளம், சரவணப்பொய்கை போன்ற புனித நதிகளில் நீராடி விட்டு அலங்குகுத்தியும், கிரிவலப் பாதையில் பல்வேறு விதமான காவடிகள் எடுத்து ஆடியும் சாமி பக்தி பாடல்களை பாடியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு செல்லவும், கீழே இறங்கிவர படிப்பாதை வழியாக கீழே இறங்கிவர ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பக்தர்கள் பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினர் 3,500 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.