பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் பிப். 21ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. பிப். 25ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச். 4ம் தேதி தங்கக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றம் மற்றும் திருக்கம்பத்தில் பூவோடு வைத்தல் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு பால், தண்ணீர், மஞ்சள்நீர் ஊற்றியும், மலர் மாலைகள் அணிவித்தும், எலுமிச்சை மாலை போட்டும் வழிபாடு நடத்தினர்.
பழனி மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பூவோடு, தீச்சட்டி ஏந்தியும், மாறுவேடங்கள் பூண்டு வந்து அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தினர். விழா நாட்களில் அம்மன் சிம்மவாகனம், தங்கக்குதிரை, வெள்ளியானை, தங்கமயில் போன்ற வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார், திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பத்மசாலா பிரிவினர் அம்மனுக்கு பொட்டு, காரை கொண்டு வந்த பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு மாரியம்மனுக்கு 16 வகை பொருட்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபச்சாரமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து பின்னர் பட்டாடைகள், நகைகள் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கும், திருக்கம்பத்துக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.