திண்டுக்கல் மாவட்டம், போடிக்காமன்வாடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பேசியதாவது;-
தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 6 முறை கிராம சபையைக் கூட்ட ஆணையிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்னையை உறுதிசெய்யும் பொருட்டு, ஊராட்சியின் வரவு – செலவுகளுக்கு ஒப்புதல் அளித்தல், கிராம வளர்ச்சிக்கு திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரங்கள் கிராம சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இக்கிராம சபைக் கூட்டத்தில், கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் 01. 04. 2023 முதல் 31. 03. 2024 வரையிலான 2023-2024-ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கைக்கு கிராமசபை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் முதலான பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், துாய்மை பாரத இயக்கம் சார்பில் 10 துாய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார்.