நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அவதி
நிலக்கோட்டை ஒன்றியத்தில் 23 கிராம ஊராட்சி பொதுமக்களும், வத்தலக்குண்டு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சி பொதுமக்களும் பல்வேறு பணிகளுக்காக தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்ட அலுவலர்களில் வட்டாட்சியர், தலைமை இடத்து வட்டாட்சியர், மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட வருவாய்த்துறையினர் பெரும்பாலும் அலுவலக நாட்களில், மதியம் 12 மணிக்கு மேல் தான் அலுவலகத்திற்கு வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்களுக்கு முதல் நாள், மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் அரை நாட்கள் மட்டும் தான் பணிக்கு வருகின்றனர். இதனால், அலுவலகத்திற்குள் பெரும்பாலான அலுவலர்கள் பணிக்கு அலுவலக நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்கின்றனர். சில அலுவலர்கள் அலுவலகப் பணி சம்பந்தமாக வெளியிடங்களுக்கு சென்று முடிவதாகவும், மேலும் சில அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது. இதனால், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.