திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் மாநாடு சம்பந்தமான பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
அதில், அழகம்பட்டியில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என, அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் கூறியதாக கூறப்படுகிறது, அதன்படி அழகம்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை, த. வெ. க நிர்வாகிகள் உடனடியாக அகற்றியுள்ளனர்,
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அழகம்பட்டிக்கு சென்ற காவல்துறையினர் த. வெ. க மாநாட்டிற்காக பிளக்ஸ் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் காவல் நிலையம் வரவேண்டும் என, உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், நிலக்கோட்டை ஒன்றிய பகுதியில் உள்ள த. வெ. க நிர்வாகிகள் மைக்கேல்பாளையம் ராஜா, அழகம்பட்டி அய்யனார் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாலை 5-மணி முதல் இரவு வரை அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் காத்திருந்தனர் வெகுநேரமாக காவல்துறையினர் வராததால் இரவு 8-மணியளவில் திடீரென முற்றுகையிட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற முற்றுகையின் போது, நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் குருவத்தாய், த. வெ. க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டோம். அனைவரும் கலைந்து சொல்லுங்கள் என, கூறியதையடுத்து த. வெ. க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.