கோவையில் நேற்று நூலகம் ஆய்வுக்குப் பின் அமைச்சர் எ.வ. வேலு நிருபர்களிடம் பேசும்போது, கோவையில் தந்தை பெரியார் பெயரில் 7 ஏக்கர் பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமானப் பணிகள் ரூ.300 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அப்போதே நூலகம் வரும் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். எனவே, முதல்வர் அறிவித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் அதற்கான திட்டங்களைத் தீட்டி ஒவ்வொரு மாதமும் என்னென்ன பணிகள் நடக்கிறது என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நூலகம் நீண்ட நாள் நீடித்து இருக்கும் வகையிலும், தரமானதாகவும் தயாராகி வருகிறது. இதற்கான அனைத்துக் கட்டிட அனுமதிச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன. ரூ.300 கோடியில் அமையும் நூலகத்தில் ரூ.250 கோடி கட்டிடப் பணிக்கும், ரூ.50 கோடி புத்தகம், கணினி போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. நூலகத்தில் தரைத்தளம் இல்லாமல் 7 தளங்கள் இருக்கும்.
200 கார்கள், 450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், முதல் இரண்டு தளங்களுக்கு எஸ்கலேட்டர் வசதியும், மற்ற தளங்களுக்கு லிப்ட் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300 பேர் அமரும் வகையில் கலையரங்கம், குழந்தைகள் நூலகம், தமிழ் மொழிக்குத் தனிப்பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது என்று கூறினார்.