கோவையில் 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு (29), சபரிராஜன் (29) உள்ளிட்ட ஒன்பது பேரிடம், சாட்சி விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகள் கேட்டார்.
முன்னதாக, இந்த வழக்கில் சி. பி. ஐ. இறுதி குற்றப்பத்திரிகையை கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அரசு மற்றும் எதிர்தரப்பு சாட்சி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் அரசு தரப்பு குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று காலை 10: 30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 3: 45 மணி வரை நீடித்தது. குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரிடமும் நீதிபதி நந்தினிதேவி கேள்விகள் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.