முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (ஜனவரி 23) தொண்டாமுத்தூர் பகுதிகளில் நேரடி கள ஆய்வை மேற்கொண்டார். தொண்டாமுத்தூர் வட்டார அலுவலகத்தில் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொண்டாமுத்தூர் சந்தை, மாரியம்மன் கோவில், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் கல்வி சார்ந்த குறைகள் மற்றும் 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்', 'தமிழ் புதல்வன்' திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை, வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் சென்று அங்குள்ள செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் எவ்வாறு சேவை பெறுகின்றனர் என்பதை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த பொதுமக்கள், தங்களது பகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர், அவர்களின் கோரிக்கைகளை கேட்டு, அதற்கான தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.