நாயக்கன்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்துக்குள் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைப்பதில் மின்வாரியம் தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக நாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் நேற்று (செப்.,25) புகார் தெரிவித்தார்.
நாயக்கன்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தின் நுழைவாயில் அருகே மின் கம்பம் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு உள்ளே வளர்ச்சி பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் தளவாட சாமான்களை கொண்டு வரவும், கொண்டு செல்லவும் பெரும் சிரமம் உள்ளது. மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதற்கான தொகையை மின்வாரியத்துக்கு செலுத்தி, பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின் கம்பம் மாற்றப்படவில்லை.
நாயக்கன் பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிக்கான தளவாட சாமான்களை கொண்டு செல்ல பெரும் சிரமம் உள்ளது. இதனால் மேல்நிலைத் தொட்டி கட்டுமான பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத இக்கட்டான நிலை உருவாகியுள்ளது, இது பற்றி ஊராட்சி துணைத்தலைவர் சின்னராஜ் கூறுகையில், அரசு விதிகளின்படி, மின் கம்பத்தை மாற்றி அமைக்க, 53 ஆயிரம் ரூபாய் மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்டு விட்டது. பணம் செலுத்தி, பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறியுள்ளார்.