கோவை: தந்தை பெரியார் நூலகம் - அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு

77பார்த்தது
கோவை மாநகரில் 7 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகி வரும் இந்தத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 

நூலகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அப்போதே அவர் உறுதியளித்தார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பணிகள் குறித்து உயர்மட்ட அளவில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நூலகம் தரமானதாகவும், நீண்ட காலம் பயன்படும் வகையிலும் கட்டப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து கட்டிட அனுமதி சான்றிதழ்களும் முறையாக பெறப்பட்டுள்ளன. மொத்தம் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த நூலகத்தில், 250 கோடி ரூபாய் கட்டிடப் பணிகளுக்காகவும், எஞ்சிய 50 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் கணினி போன்ற அதிநவீன உபகரணங்கள் வாங்குவதற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த நவீன நூலகம் தரை தளம் இல்லாமல் ஏழு தளங்களைக் கொண்டு விளங்குகிறது. பொதுமக்களின் வசதிக்காக 200 கார்கள் மற்றும் 450 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான விசாலமான இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நேற்று அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி