கோவை: சாயக் கழிவுகளால் மஞ்சள் நிறமாக மாறிய பவானி ஆறு!

75பார்த்தது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் ஓடும் பவானி ஆற்று நீர், சாயக் கழிவுகள் கலப்பால் மஞ்சள் நிறத்திற்கு மாறி மாசுபட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறுமுகை பகுதியில் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் நீர், ஆறு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பவானி ஆற்று நீர் அடிக்கடி மாசடைந்து நிறம் மாறி காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்தனர். புகாரின் பேரில், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஆய்வு நடத்தினர். ஆற்று நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கும் எடுத்துச் சென்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆற்றில் சாயக் கழிவுகளைக் கலக்கும் தனியார் ஆலைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக, பவானி ஆற்றின் நீர் மஞ்சள் நிறத்தில் மாறி முற்றிலும் மாசுபட்டுள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி