வில்லிவாக்கம் - Villivakkam

வேலை வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது

அமைந்தகரை, பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். பட்டதாரி. இவர், கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை போலீசில் அளித்த புகார்: ரமேஷ் என்பவர் முகநுால் சமூக வலைதளம் வாயிலாக எனக்கு அறிமுகமாகி, பல மாதங்களாக நட்பு ரீதியாக பழகி வந்தார். அவர், ரயில்வேயில் பணிபுரிவதாகவும், எனக்கும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதற்காக, என்னிடம் பல தவணையில் 3 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றார். பின், பல மாதங்களாக, வேலை குறித்து எந்த தகவலும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும். போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த ரமேஷை நான்கு மாதங்களாக தேடி வந்தனர். மொபைல் போன் சிக்னல் அடிப்படையில், ரமேஷ் பெரம்பலுாரில் இருப்பது தெரிந்தது. அங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்த, ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் போரூரை சேர்ந்த ரமேஷ்(39) என்பதும், வேலை இல்லாமல் இருப்பதும் தெரிந்தது. ஆகாஷிடம் பணத்தை பெற்று ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார். அவரை அமைந்தகரை போலீசார் நேற்று முன்தினம்(செப்.10) இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


சென்னை
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு; போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்
Sep 12, 2024, 15:09 IST/துறைமுகம்
துறைமுகம்

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு; போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்

Sep 12, 2024, 15:09 IST
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் காவல்துறை ஆமை வேகத்தில் விசாரணை செய்வதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ. பி. சூரிய பிரகாசம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு இன்று(செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் தனது விசாரணையை சரியாக செய்துள்ளதாக தெரிவித்தனர். அதன் அறிக்கையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர் என கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். என்சிசி ஆசிரியர் மற்றும் சிவராமனுக்கும் என்ன தொடர்பு? எந்த அடிப்படையில் என்சிசி முகாம் நடத்த தனியார் பள்ளியில் அனுமதி வழங்கப்பட்டது? என பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.